home >> அரசர். யோசியா கி.மு ( 640 - 609)
அரசர். யோசியா கி.மு ( 640 - 609)


             யூதாவின் மிகச்சிறந்த அரசர்களுள் ஒருவராகக் கருதப்பட்ட யோசியா தனது 8-ம் வயதில் அரசராகப் பொறுப்பேற்று 31 வருடம் (கி.மு-640 முதல் 609 வரை) யூதேயா தேசத்தில் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். யோசியா என்ற பெயருக்கு அர்த்தம் ‘’யெகோவா துணை நிற்கிறார்’’ என்பதாகும். யோசியா ராஜா எட்டு வயதிலிருந்தே “கர்த்தருடைய பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான். (II நாளா 34:2). பின்னர் தனது 16-ம் வயதில் தேவனை முழு இருதயத்தோடுத் தேட ஆரம்பித்தான். தாவீது அரசனுக்குப் பிறகு தோன்றிய பல அரசர்கள் தேவனுக்கு பிரியமான வழியில் நடக்காமல் விக்கிரகங்களுக்குக் கோயில்களையும் பலிபீடங்களையும் ஏற்படுத்தினர். அதிலே யோசியாவுக்கு முன் அரசாண்ட அவனது தாத்தா மனாசேவும், அவனது தந்தை ஆமோனும் முக்கியமானவர்களாக இருந்தனர். மனாசே 55 வருடமும், ஆமோன் 2 வருடமும் பொல்லாத வழியில் நடந்து, கானானிய மக்களின் கடவுளாகிய பாகாலுக்கு பல பலிபீடங்களை எடுப்பித்துக் கட்டியிருந்தனர்.

யோசியா இஸ்ரவேல் தேசத்தை சுத்திகரித்தல்


             யோசியா ராஜா பிறப்பதற்கு சுமார் 300 வருடங்களுக்கு முன்பே அவரை குறித்து கர்த்தர் உரைத்ததாகிய “பலிபீடமே பலிபீடமே, இதோ, தாவீதின் வம்சத்தில் யோசியா என்னும் பேருள்ள ஒரு குமாரன் பிறப்பான்; அவன் உன்மேல் தூபங்காட்டுகிற மேடைகளின் ஆசாரியர்களை உன்மேல் பலியிடுவான்; மனுஷரின் எலும்புகளும் உன்மேல் சுட்டெரிக்கப்படும் என்பதைக் கர்த்தர் உரைக்கிறார்” என்ற தீர்க்கதரிசனத்தை I இராஜாக்கள் 13:2-ல் வாசிக்கலாம். அதாவது யோசியா ராஜாவுக்கு கர்த்தர் நியமித்திருந்த மிக முக்கியமான பணி அந்நிய தெயவங்களின் பலிபீடங்களை இடித்து தேசத்தை சுத்திகரித்துப் பரிசுத்தப்படுத்துவதே ஆகும்.

                       தேவனை முழு இருதயத்தோடு தேடிய யோசியா ராஜா, தனது 18-ம் வயதிலே கர்த்தர் தனக்கு நியமித்திருந்த திருப்பணியாகிய, “மேடைகள், தோப்புகள், சுரூபங்கள் விக்கிரகங்களாகிய இவைகள் அற்றுப்போகும்படி, யூதாவையும் எருசலேமையும் சுத்திகரிக்கத் தொடங்கினார். அவருக்கு முன்பாகப் பாகால்களின் பலிபீடங்களை இடித்தார்கள்; அவைகளின் மேலிருந்த சிலைகளை வெட்டி, விக்கிரகத் தோப்புகளையும், வார்ப்பு விக்கிரகங்களையும், வெட்டு விக்கிரகங்களையும் உடைத்து நொறுக்கி, அவைகளுக்குப் பலியிட்டவர்களுடைய பிரேதக்குழிகளின்மேல் தூவி, பூஜாசாரிகளின் எலும்புகளை அவர்களுடைய பீடங்களின்மேல் சுட்டெரித்து, இவ்விதமாய் யூதாவையும் எருசலேமையும் சுத்திகரித்தார் யோசியா. அப்படியே அவர் மனாசே எப்பிராயீம் சிமியோன் என்னும் பட்டணங்களிலும், நப்தலிமட்டும் பாழான அவைகளின் சுற்றுப்புறங்களிலும் செய்தார் (II நாளாகமம் 34:3-6). 18-ம் வயதிலே தேசத்தை சுத்திகரிக்கும் பணியை துவங்கிய யோசியா தனது 24-ம் வயதிலே முழு இஸ்ரவேல் நாட்டையும் சுத்திகரித்தார். என்ன ஆச்சரியம் பாருங்கள் 24-வயதே நிரம்பிய யோசியா என்ற வாலிபன் ஒரு தேசத்தையே சுத்திகரிக்க முடியுமென்றால் நம்மால் ஏன் முடியாது. யோசியாவிற்குள் இருந்த “கர்த்தருக்காக வாழவேண்டும்” என்ற வைராக்கியமே அத்தகைய பெரிய காரியங்களைச் செய்யவைத்தது.

                   ஆகவே இளைஞர்களே, இன்றைக்கு நீங்கள் ஒரு பொருத்தனை செய்யுங்கள். வாலிபப் பிராயத்திலே சிருஷ்டிகரை நினைக்க வேண்டும் என்கிற பொருத்தனைதான் அது. கிருபையின் நாட்கள் முடிவதற்கு முன்பாகவும், மனசாட்சியை கால்களின் கீழே தள்ளி அடிக்கடி மிதித்துப் போட்டதினால் அது செத்துப் போவதற்கு முன்னதாகவும், இருதயம் கடினப்பட்டுப் போவதற்கு முன்பாகவும், உங்களுக்கு நேரமும், பெலனும், சந்தர்ப்பங்களும் இருக்கும்போதே கர்த்தரிடம் வந்து விடுங்கள். ஆவியானவர் என்றென்றைக்கும் உங்களுடனே போராடிக் கொண்டிருக்க மாட்டார். மனசாட்சியின் சத்தத்தை நீங்கள் தொடர்ந்து எதிர்த்துக் கொண்டேயிருந்தால், அந்த சத்தம் மங்கி, ஒரு நாளில் மறைந்து போய்விடும். அத்தேனே பட்டணத்தார் பவுலிடம், “நீ சொல்லுகிறதை இன்னொரு வேளை கேட்போம் என்றார்கள்”(அப் 17:32). ஆனால், பவுல் பேசுவதைக் கேட்க இன்னொரு சந்தர்ப்பம் அவர்களுக்கு ஏற்படவேயில்லை. துரிதமாக செயல்படுங்கள்; தாமதிக்காதிருங்கள்; இனிமேலும் தயங்காதிருங்கள்; கர்த்தரிடம் உங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து சாதிக்கின்றவர்களாகுங்கள்.

யோசியா ஆலயத்தைப் பழுதுபார்த்து மக்களை சுத்திகரித்தல்


             யோசியாவின் கொள்ளுத்தாத்தாவாக்கிய எசேக்கியா அரசன் கர்த்தருக்கு பிரியமான வழியில் நடந்து அந்நிய கடவுள்களின் பலிபீடங்களை அகற்றி தேவனுக்கு பயந்து வாழ்ந்தவர். அவருடைய நாட்களில் எருசலேமில் சாலமோன் கட்டிய தேவாலயத்தைப் பழுதுபார்க்கும் பணியைத் துவக்கினார். ஆனால் அவருக்குப் பின் அவரது மரபுவழியில் வந்த மனாசேயும், ஆமோனும் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்யாமல் விட்டுவிட்டனர். இப்படியாக ஆலயம் பழுதுபார்க்கும் பணியானது சுமார் 75 வருடங்களுக்கும் மேலாகக் கிடப்பில் கிடந்தது. தனது 24-வயதில் தேசம் முழுவதிலும் இருந்து அந்நிய தெய்வங்களின் பலிபீடங்களை தகர்த்து தேசத்தை சுத்திகரித்த அரசர் யோசியா, அடுத்த பணியாக எருசலேமின் தேவாலயத்தை பழுதுபார்க்கத் தொடங்குகிறார். ஆலயத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருக்கும் போது இல்க்கியா என்னும் ஆசாரியன் கர்த்தருடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தைக் கண்டெடுத்தார். யோசியா அரசனின் செயல் காரணாகிய சாப்பான் கையில் அதைக் கொடுத்தார். சாப்பான் அரசனிடம் சென்று, “ ஆசாரியனாகிய இல்க்கியா என் கையில் ஒரு புஸ்தகத்தைக் கொடுத்தான் என்பதைச் அறிவித்து, ராஜாவுக்கு முன்பாக அதை வாசித்தான். (II நாளாகமம்34:14-18)

                       அது என்னவென்றால் “இஸ்ரவேல் ஜனங்கள் என்னைவிட்டு, தங்கள் கைகளின் கிரியைகள் எல்லாவற்றிலும் எனக்குக் கோபம் உண்டாக்க வேறே தேவர்களுக்குத் தூபங்காட்டின படியினால், என் உக்கிரம் அவிந்துபோகாதபடி இந்த ஸ்தலத்தின்மேல் இறங்குமென்று கர்த்தர் உரைக்கிறார். சகல சாபங்களுமாகிய பொல்லாப்பை நான் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணுவேன்,’’ இந்த நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை யோசியா ராஜா கேட்டபோது, தன் இருதயம் இளகி, தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்தி, அவருக்கு முன்பாகப் பணிந்து, தன் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கர்த்தருக்கு முன்பாக அழுதார். (IIநாளாகமம்34:24-27).

                   ஆடையைக் கிழித்துத் தாழ விழுந்து கதறி அழுவது அந்த நாட்களில் ஒருவருடைய அதீத துக்கத்தை வெளிப்படுத்துவதாக இருந்தது. யோசுவா (7:6), தாவீது (2 சாமுவேல் 13: 31), யோபு (1:20) போன்றவர்கள் அதேபோல அழுது கர்த்தரிடம் மன்றாடி ஜெபித்தபொழுது கர்த்தரும் அவர்களுடைய ஜெபத்தைக் கேட்டு அவர்களுக்கு மனமிரங்கினார். அதைப்போலவே யோசியா அரசன், தனது ஆடையைக் கிழித்து கதறி அழுது தன் மக்களுக்காக மன்றாடின பொழுது கர்த்தர் யோசியாவிற்கு மனமிரங்கினார். “நீ உயிரோடிருக்கும் நாளிலே உன் கண்கள் இந்த ஸ்தலத்தின்மேலும் இதின் குடிகளின்மேலும் வரப்பண்ணும் எந்த பொல்லாப்பையும் காண்பதில்லை” என்று “உல்தாள்” தீர்க்கதரியானவள் மூலம் வாக்குறுதி அளித்தார். அப்பொழுது யோசியா ராஜா, ஆசாரியர், லேவியர், மூப்பர், பெரியோர், சிறியோர் என எல்லா ஜனங்களையும் தேவாலயத்திற்குக் கூடிவரச் செய்து, அவர்களுடைய காதுகள் கேட்கும் படியாய், “தன் முழுஇருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தேவனுடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் கைக்கொள்ளுவேன்” என்றும் கர்த்தருடைய சந்நிதியில் உடன்படிக்கை பண்ணினார். (II நாளாகாமம் 34:31) மேலும் எல்லா ஜனங்களையும் அதே போல உடன்படிக்கை (Agreement) செய்யவைத்தார்.

             யோசியா முதலாவது தேசத்தை சுத்திகரித்தார். தேவனுக்காக வாழும் வைராக்கியமும், அவனுடைய அதிகார பலமும் இதை செய்ய வைத்தது. ஆனால் தேசத்தின் ஜனங்களைச் சுத்திகரிக்க அவர் செய்ததெல்லாம் ஆடையைக் கிழித்துக் கதறி அழுது ஜெபித்த மன்றாட்டு ஜெபமே. இன்றைக்கு அநேகரிடம் தேவனுக்காய் வாழும் வைராக்கியம் இருக்கும். ஆனால் மன்றாட்டு ஜெபம் இருப்பதில்லை. மன்றாடுவது என்பது, ஒரு காரியத்திற்காக மிகவும் கெஞ்சிக்கேட்பதைக் குறிக்கும். நமது உள்ளத்தில் அதிக விசாரங்கள் பெருகுகையில் நாம் தேவனின் சமூகம் சென்று, மன்றாடி ஜெபிப்பது உண்டு. மோசே, தேவனிடம் சென்று இஸ்ரவேல் ஜனங்களின் பாவத்தை அவர்களுக்கு மன்னிக்கும்படியாக மன்றாடுவதைக் காண்கிறோம். இந்த மன்றாட்டு ஜெபம் வெறும் வார்த்தைகளாகவோ அல்லது கடமைக்காகவோ செய்யப்பட்ட ஒன்றல்ல. மோசே ஜெபித்த விதத்திலிருந்து அது அவர் உள்ளத்தின் ஆழத்திலிருந்து வந்த ஒரு மன்றாட்டு ஜெபம் என்பதை விளங்கிக்கொள்ளலாம். ‘’இந்த ஜனங்களை மன்னிக்கக் கூடுமானால் மன்னியும், இல்லாவிட்டால் என் பேரை ஜீவ புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடும்,’’ (யாத் 32:32) என அவர் ஜெபித்தார். அதாவது தான் தண்டிக்கப்பட்டாலும் பரவாயில்லை. தனது ஜனங்கள் மன்னிப்படைய வேண்டும் என்பதே அவரது ஜெபம். ஜனங்களுக்காக மன்றாடி எப்படியாவது தேவனுடைய கோபாக்கினையில் இருந்து அவர்களைத் தப்புவிக்க வேண்டும் என்பதே மோசே செய்த ஜெபத்தின் நோக்கமாக இருந்தது.

             24 வயதே நிரம்பிய யோசியாவினால் தேசத்தையும், அதின் ஜனங்களையும் பாவத்திலிருந்து விலக்கி பரிசுத்தவழியில் நடத்தியது, அவரிடமிருந்த தேவனுக்காய் வாழும் வைராக்கியமும், மக்களுக்காக ஜெபித்த மன்றாட்டு ஜெபமுமே ஆகும். நாமும் தேவனுக்காய் வைராக்கியமாய் வாழ்ந்து, தேசத்தின் ஜனங்களின் இரட்சிப்பிற்காக மன்றாடி ஜெபித்தால் நிச்சயம் கர்த்தர் நம்மைக் கொண்டும் பெரிய காரியங்களைச் செய்வார்.

பரிசுத்தமான பஸ்காவை அனுசரித்தல்


             யோசியா ராஜா முதலாவது தனது தேசத்தை சுத்திகரித்தார். இரண்டாவது தேசத்தின் ஜனங்களை சுத்திகரித்தார். மூன்றாவதாக தனது 26-ம் வயதில், எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து இஸ்ரவேல் ஜனங்கள் விடுவிக்கப்பட்டதை நினைவு கூறும் பஸ்கா பண்டிகையை அனுசரித்தார். இந்தப் பண்டிகையானது தலைமுறை தலைமுறையாக, நித்திய நித்தியமாக நினைவு கூற வேண்டும் என்று கர்த்தர் மோசேயைக் கொண்டு கட்டளையிட்டிருந்த பொழுதும், இஸ்ரவேல் ஜனங்கள் கிட்டத்தட்ட 400 வருடங்களாக இந்த பண்டிகையை சரியான வகையில், பரிசுத்தமான முறையில் அனுசரிக்காமல் இருந்தனர். இதைக் கண்ட யோசியா அரசர், ஆசாரியர், லேவியர் என எல்லோரையும் பரிசுத்ததோடு பஸ்காவை அனுசரிக்கும்படி செய்தார். தீர்க்கதரிசியாகிய சாமுவேலின்நாள் தொடங்கி, இஸ்ரவேலிலே அப்படிக்கொத்த பஸ்கா ஆசரிக்கப்படவில்லை; யோசியாவும், ஆசாரியரும், லேவியரும், யூதாவனைத்தும், இஸ்ரவேலில் வந்திருந்தவர்களும், எருசலேமின் குடிகளும் ஆசரித்த பஸ்காவைப்போல இஸ்ரவேல் ராஜாக்களில் ஒருவரும் ஆசரித்ததில்லை (II நாளா 35:6,18). சாமுவேல் நாட்கள் முதல் தாவீது உட்பட அநேக ராஜாக்கள் பஸ்காவை கொண்டாடியிருந்தாலும் மக்களை பரிசுத்தப்படுத்தி எந்த அரசனும் பஸ்காவை அனுசரிக்காததினால், யோசியா அரசன் அனுசரித்த பரிசுத்த பஸ்கா, கர்த்தரின் பார்வையில் விலையேறப் பெற்றதாக இருந்தது.

                       பஸ்கா பண்டிகையானது ஒவ்வொரு ஆண்டும், யூத காலண்டரில் முதல்மாதகமாகிய நிசான் மாதம் 14-ம் தேதி கொண்டாடப்பட்டது. நிசான் மாதம் இன்றைய காலண்டரில் மார்ச் மாத மத்தியில் மற்றும் ஏப்ரல் மாதத்தின் துவக்கத்திலும் வருகிறது. யூதர்கள் எகிப்திலிருந்த அந்த கடைசிநாள் இரவு அன்று, தேவன் எகிப்தியரின் தலையீற்றுகள் அனைத்தையும் கொல்லத் தீர்மானித்தார். காரணம், எகிப்தின் ராஜாவான பார்வோன் யூதர்களை விடுதலை செய்ய சம்மதிக்கவில்லை. அதற்கு முன், தேவன் யூதர்களை ஒரு ஆட்டுக் குட்டியை அடித்து, அதன் இரத்தத்தை அவர்களது வீடுகளின் நிலைக்கால்களில் பூசச்சொன்னார். சங்காரத்தூதன் வந்து, அந்த நிலைக்கால்களில் பூசப்பட்டிருக்கும் இரத்தத்தைக் காணும் போது, அந்த வீடுகளில் உள்ள தலையீற்றுக்களை அழிக்கக்கூடாது என்பதை அறிந்து கொள்வான். (யாத் 12:1-14, 21-30; எபிரெயர் 11:28) ‘பஸ்கா’ என்றால் கடந்து செல்வது என்று பொருள். இதை ஆங்கிலத்தில் ‘’PASSOVER” என்று சொல்வார்கள்.

                       அன்றைக்கு இஸ்ரவேலர்களை ஒரு ஆட்டுக் குட்டியின் இரத்தம், பேரழிவிலிருந்து காப்பாற்றினது. அதே போல, இயேசு கிறிஸ்துவின் இரத்தம் வரப் போகின்ற உலகப் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்ற போதுமானதாக உள்ளது. ஒரு வேளை நீங்கள் பாவம் கழுவப்படாத நிலையில் இருக்கின்றீர்களா? வேதாகமம் சொல்கின்றது, “குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும். நம்முடைய பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார். (I யோவான்1:7-9) என்று. ஆகவே உடனடியாக, ‘’இயேசுவே நீர் என்னுடைய பாவங்களுக்காகவும் சிலுவையில் இரத்தம் சிந்தினீர் என்பதை நம்புகிறேன். உம்முடைய இரத்தத்தால் என்னுடைய பாவங்களை அகற்றிவிடும். உமக்காய் பரிசுத்தமாய் வாழ என்னை அர்ப்பணிக்கிறேன்’’ என்று சொல்லி உங்களுக்காக இயேசு வைத்திருக்கும் பாவ மன்னிப்பைப் பெற்றுக் கொள்ளுங்கள். அன்றைக்கு யோசியா அரசன் அனுசரித்த பஸ்கா கர்த்தரின் பார்வையில் விலையேறபெற்றதாக இருந்ததைப்போல இன்றைக்கு உங்களுடைய அர்ப்பணிப்பு இயேசுவின் பார்வையில் விலையேறப் பெற்றதாக இருக்கும்.

பேராசையால் ஜீவன்விட்ட யோசியா


             யோசியா ராஜாவிற்கு கர்த்தர் நியமித்திருந்த பணி தேசத்தையும், தேசத்தின் ஜனங்களையும் கர்த்தருக்குப் பரிசுத்தப்படுத்துவதே. இப்பணியை செம்மையாகச் செய்துவந்தார் யோசியா. ஆகவே தான் அவர் இன்று வரைக்கும் புகழப்படுகிற ஒரு அரசராகத் திகழ்கின்றார். ஆனால் கர்த்தர் தமக்கு கொடுத்த திருப்பணியை விட்டுவிட்டு தனது அரசாட்சியை விரிவுபடுத்த முயன்ற யோசியா தனது முதல் போரிலேயே மரணத்தை சந்தித்தார். கி.மு-612-ல் பாபிலோனிய (ஈராக்) அரசன், அசீரியா நாட்டின் (சிரியா) மீது படையெடுத்து நினிவே பட்டணத்தைப் பிடித்தார். அசீரியா நாட்டை தனது பகை நாடாகவே கருதிய யோசியாவிற்கு, அசீரிய அரசின் வீழ்ச்சி மிக்க சந்தோஷத்தைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் தனது அரசாட்சியின் எல்லையை விரிவாக்கவும் ஏற்றதாய் அமைந்தது. கி.மு.-609-ல் எகிப்து அரசன் நேகோ ஐபிராத்து நதியோரமான கர்கேமிஸ் என்ற அசீரிய பட்டணத்தைப் பிடித்திருந்த பாபிலோனிய படைக்கு எதிராய் யுத்தம் செய்யச் சென்றார்.

                       இந்த கர்கேமிஸ் பட்டணம் அந்த நாட்களில் அசீரிய நாட்டின் முக்கிய பட்டணமாகவும், வாணிகத்தில் சிறந்து விளங்கிய பட்டணமாகவும் இருந்தது. இந்தப் பட்டணம் சரியாக இஸ்ரவேல் நாட்டுக்கு மேலாக அமைந்திருந்தபடியால் இந்த நாட்டைப் பிடிக்கும் எண்ணம் யோசியாவிற்கு இருந்திருக்கக் கூடும். ஆகவேதான் யோசியா, எகிப்து அரசன் நேகோவிற்கு விரோதமாய் யுத்தம் செய்யப் புறப்பட்டார். ‘’நேகோ யோசியாவிடத்திற்கு ஸ்தானாதிபதிகளை அனுப்பி, யூதாவின் ராஜாவே, எனக்கும் உமக்கும் என்ன? நான் இப்போது உமக்கு விரோதமாய் அல்ல, என்னோடே யுத்தம்பண்ணுகிற ஒருவனுக்கு விரோதமாய்ப் போகிறேன்; நான் தீவிரிக்க வேண்டுமென்று தேவன் சொன்னார்; தேவன் என்னோடிருக்கிறார்; அவர் உம்மை அழிக்காதபடிக்கு அவருக்கு எதிரிடைசெய்வதை விடுமாறு சொன்னான். ஆனாலும் யோசியா அரசன், தன் முகத்தை அவனை விட்டுத் திருப்பாமலும், நேகோ சொன்ன அவனுடைய வாயின் வார்த்தைகளுக்குச் செவிகொடாமலும் அவனோடே யுத்தம்பண்ண வேஷம்மாறி, மெகிதோவின் பள்ளத்தாக்கிலே யுத்தம் பண்ணுகிறதற்கு வந்தான் (II நாளா 35:20-22).

                       அப்பொழுது வில்வீரர் யோசியா ராஜாவின்மேல் அம்பெய்தார்கள். அப்பொழுது ராஜா தன் ஊழியக்காரரை நோக்கி: என்னை அப்புறம் கொண்டுபோங்கள், எனக்குக் கொடிய காயம்பட்டது என்று கதறி பின்னர் தனது ஜீவனை விட்டார் (II நாளா 35:23). பாருங்கள் எத்தனை அருமையான ராஜா யோசியா. தனது 8-வயதிலேயே அரியணை ஏறி, கர்த்தரின் வழியில் நடந்து, தனது 24 வயதிற்குள்ளாகவே தேசத்தையும், தேசத்தின் ஜனங்களையும் கர்த்தருக்கென்று பரிசுத்தப்படுத்தினார். தனது 26–ம் வயதில் தேவனே சாட்சி கொடுக்கும் அளவிற்கு பரிசுத்த பஸ்காவையும் அனுசரித்தார். ஆனால் தனது 39-ம் வயதிலே தேவன் தன்மீது வைத்திருந்த நோக்கத்தையும், அழைப்பையும் மீறி, பக்கத்துப் பட்டணத்தைப் பிடிக்க வேண்டும் என்று பேராசைப்பட்டு, எகிப்து அரசனுடன் யுத்தம் செய்யச் சென்று மரணத்தைத் தழுவினார். இன்றைக்கும்கூட அநேக கிறிஸ்தவர்கள், ஊழியக்காரர்கள் தங்கள் ஓட்டத்தை சிறப்பாகத் துவக்குகின்றனர். ஆனால் அவர்களையும் அறியாமல் ஒரு கட்டத்தில் பேராசை என்னும் வலையில் விழுந்து மடிந்து போகின்றார்கள். யோசியாவின் வாழ்வில், அவர் தேவனுக்காய் செய்த சாதனைகளும், அவரது வீழ்ச்சியும் இடம் பெற்றமைக்குக் காரணம், நாம் கர்த்தருக்காக சாதிக்க வேண்டும். அவ்வாறு சாதிக்கையில் பேராசை கொள்ளாமல், கர்த்தர் நம்மை அழைத்த அழைப்பில் தெளிவாய் இருந்து, மென்மேலும் பெரிய காரியங்களைச் சாதிக்க வேண்டும். யோசியா அரசனின் வாழ்க்கை வரலாறு இன்றைய வாலிபர்களும், விசுவாசிகளும், போதகர்களும் தெரிந்திருக்க வேண்டிய வரலாறு ஆகும். இதை வாசிக்கின்ற நீங்கள் யோசியா அரசனைப் போல் பேராசை கொள்பவர்களாக அல்லாமல், கிறிஸ்துவுக்காகச் சாதிக்கின்றவர்களாக இருக்க வேண்டும். உங்களுடைய அர்ப்பணிப்பு உங்களை சாதனையாளராக மாற்றப்போவது நிச்சயம். ஆமென்.