home >> மோசேயைக் காப்பாற்றிய ஆறு பெண்கள்
மோசேயைக் காப்பாற்றிய ஆறு பெண்கள்

             இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உங்களுக்கு எனது அன்பின் வாழ்த்துக்கள். இந்த புத்தகத்தின் மூலமாக உங்களை சந்திப்பதிலே நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். இன்றைக்கு பெண்கள் அதிகமாய் வெளியிடங்களுக்கு சென்று ஊழியம் செய்ய முடியாத நிலை உள்ளது. சங்கீதம் 68:12 வசனத்தில் பார்கின்றோம் “வீட்டிலிருந்த ஸ்திரீயானவள் கொள்ளைப் பொருளைப் பங்கிட்டாள்”. கர்த்தருடைய ஊழியத்தில் சகோதரிகளுக்கும் சமபங்கு உண்டு என்பதை இந்த வசனம் நமக்கு காண்பிக்கின்றது. தங்கள் குடும்பத்தை ஆவிக்குரிய வழியில் நடத்தவும், குழந்தைகளை கர்த்தருக்குள் நடத்தும் படியான மாபெரும் ஊழியம் பெண்களுக்கு அருளப்பட்டுள்ளது. இன்றைக்கு நான் நற்செய்தியை அநேக பகுதிகளில் அறிவித்து, அநேகரை பரலோக ராஜ்யத்திற்கு நேராக நடத்தி பரலோகத்தில் பொக்கிஷத்தை சேர்க்கின்றேன். எனக்கு சிறுவயதில் இயேசுவைப் பற்றி போதித்த எனது தாயார் மற்றும் எனக்கு சிறுவர் வகுப்புகள் எடுத்த எனது பக்கத்து வீட்டு அக்கா என பல பெண்களுக்கு இந்த பொக்கிஷத்திலே பங்கு உண்டு. விடுதலை வீரர் மோசேயின் வாழ்க்கையிலும் ஆறு பெண்கள், அவருடைய உயிரைக் காப்பற்றியுள்ளார்கள். அவர்களது பெயர்கள் வேதத்தில் பிரபலமாக இல்லாவிட்டாலும், இவர்கள் கர்த்தரின் பார்வைக்கு செம்மையானதை செய்து, தைரியமாக சத்துருவை எதிர்த்துநின்று, திறமையாக துரிதமாய் துணிவுடன் செயல்பட்டு மோசேயின் உயிரைக் காப்பாற்றி இஸ்ரயேல் தேசம் உருவாக காரணமாக இருந்துள்ளார்கள். இந்த ஆறு பெண்களின் வாழ்க்கை சம்பவங்களை நிச்சயமாக ஒவ்வொரு பெண்களும் அறிந்திருக்க வேண்டும். ஜெபத்துடனும் விசுவாசத்துடனும் அவர்களைப் பற்றி தொடர்ந்து படியுங்கள். உங்கள் வாழ்க்கையில் அற்புதமான மாற்றத்தைக் காண்பீர்கள்.

சிப்பிராள், பூவாள் – யாத்திராகமம் 1:15-21


             இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு முன் சுமார் 1800–ம் வருடத்தில் யோசேப்பு எகிப்தின் உயரதிகாரியாக இருந்தபொழுது, இஸ்ரயேல் என்றழைக்கப்பட்ட யாக்கோபுவின் குடும்பம் எகிப்து நாட்டில் குடியமர்ந்தார்கள். எகிப்திய மன்னர்களும் மக்களும், இஸ்ரயேல் மக்களை மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார்கள். யோசேப்பின் மரணத்திற்குப்பின் ஒரு சில வருடங்கள் உருண்டோடின. தங்கள் தேசத்தில் வாழும் எபிரேய மக்கள் எளிமையான மேய்ப்பன் வாழ்வைக் கடைபிடித்ததால், தங்களைவிட அவர்களை இழிவானவர்களாக எகிப்தியர்கள் கருதலாயினர். திரளாகப் பெருகிய எபிரெய மக்களை ஒடுக்குவதும், அழிப்பதும் மட்டுமே தங்கள் சுக வாழ்வு செழிக்க வழிகோலும் என அவர்கள் முடிவெடுத்தனர்.

                       ஆகவே எகிப்தியர்கள் ஒரு திட்டம் வகுத்து, “இஸ்ரயேல் மக்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள். ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரயேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள். எகிப்தின் ராஜா, சிப்பிராள் பூவாள் என்னும் பேருடைய எபிரெய மருத்துவச்சிகளோடே பேசி: நீங்கள் எபிரெய ஸ்திரீகளுக்கு மருத்துவம் செய்யும்போது, ஆண்பிள்ளையானால் கொன்று போடுங்கள், பெண்பிள்ளையானால் உயிரோடிருக்கட்டும் என்றான்” (யாத்1:15-16)

                   சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு பெண் மருத்துவச்சிகளும், தேவனுக்கு பயந்து வாழ்ந்ததினால் எகிப்து அரசனின் கொலை பாதகச் செயலுக்குத் துணை போகாமல், எல்லா எபிரெய ஆண் குழந்தைகளையும் காப்பாற்றினார்கள். சிப்பிராள் என்றால் “பிரகாசமானவள்” என்றும், பூவாள் என்றால் “அழகான பெண்” என்றும் அர்த்தம் ஆகும். இந்த இரண்டு பெண்களாலும் இஸ்ரயேல் ஆண்களின் எண்ணிக்கை பலுகிப்பெருகியதை எண்ணாகமம் 1:46-ல் நாம் வாசித்து அறிந்துகொள்ளலாம். இங்கு 6 லட்சத்து 3,550 இருபது வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் எகிப்திலிருந்து வெளியேறிய இஸ்ரயேலர்களாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலே ஒருவராக விடுதலை வீரர் மோசே காப்பாற்றப்பட்டார். ஆதலால்தான் தாம் எழுதிய யாத்திராகமத்தில் முதலாவது அதிகாரத்திலேயே இவர்களது பெயர்களை குறிப்பிட்டுள்ளார் மோசே.

             எபிரெயர்கள் எகிப்திலே அடிமைகளாக இருந்த போதிலும், இந்த இரண்டு பெண்களும், பிரசவம் பார்க்கும் மருத்துவச்சிகளாக உயர்ந்திருப்பது வியப்புக்குரியதாக உள்ளது. இவர்கள் இருவரது கடின உழைப்பையும் விடா முயற்சியையும் இது காண்பிக்கின்றது. இவர்கள் ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றுவதை அறிந்த எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து, “நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான். அதற்கு மருத்துவச்சிகள் பார்வோனை நோக்கி: எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள்; மருத்துவச்சி அவர்களிடத்துக்குப் போகுமுன்னமே அவர்கள் பிரசவித்தாகும் என்றார்கள்” (யாத் 1:17-19). இஸ்ரயேல் மக்களைக் கொள்ளத் துடிக்கும் எகிப்து அரசனிடமே சென்று, எபிரெய ஸ்திரீகள் எகிப்திய ஸ்திரீகளைப்போல் அல்ல, அவர்கள் நல்ல பலமுள்ளவர்கள் என்று சொல்வதிலிருந்து இவர்கள் இருவரது தைரியமும், தேவ பக்தியும் தெளிவாகின்றது. மேலும் இந்த இரண்டு பெண்களும், எபிரேய மக்களை ஏளனமாக பார்க்கும் எகிப்தின் பெண்களை வெறுப்புணர்வுடன் பார்க்காமல், அவர்களுக்கும் பிரசவம் பார்த்திருக்கின்றார்கள் என்பதை இவர்களது பதிலில் இருந்து நாம் அறிய முடிகின்றது. இன்றைய சமூகத்து பெண்களுக்கும் சவால் விடும் வகையில் சிப்பிராள், பூவாள் வாழ்ந்திருகின்றார்கள்.

             மருத்துவச்சிகள், எகிப்தில் வளரும் ஆண்பிள்ளைகள் படும் கஷ்டங்களைப் பார்த்து, இவர்கள் இந்தப் பாடு படுவதற்கு இவர்கள் பிறக்கும் போது கொன்றுபோடுவதே நலமாயிருக்கும் என்று எண்ணியிருக்கலாம். பார்வோனின் ஆட்சியில், எபிரெயர் சரீரப்பிரகாரமாய், அடிக்கப்பட்டு, உதைக்கப்பட்டு, கடின உழைப்புக்குள்ளாயினர். இப்படிப்பட்ட கேவலமான வாழ்க்கை நம் பிள்ளைகளுக்கு வேண்டுமா? என்று இவற்றை ஒரு சாக்காய் காண்பித்து குழந்தைகளை அழித்து பார்வோனிடம் நல்ல பெயர் வாங்கியிருந்திருக்கலாம் அல்லவா? ஆனால் “மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள். இதினிமித்தம் சிப்பிராள், பூவாள் என்ற இரு மருத்துவச்சிகளுக்கும் தேவன் நன்மை செய்தார், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார் (யாத் 1: 17-21).

             இன்றைய சமுதாயத்திலும் பெண் பிள்ளைகள் பிறந்தாலே அதிக செலவாகும், மேலும் வீட்டுக்குப் பாரம் தானே! என்று அநேகர் நினைகின்றார்கள். பெண் குழந்தைகள் பிறந்து பிறருக்கு சுமையாய் வாழ்வதைவிட இவர்களை அழித்துவிடுவதே மேல் என்று சொல்லி அநேக இடங்களில் பெண் சிசுக்கொலையும் நடைபெறுகின்றது. ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் நீங்கள் சரிசமமாய் நேசிக்க வேண்டும். அநேகர் தங்களுக்கு ஆண் குழந்தை தான் வேண்டுமென விரும்புவார்கள். அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தால் ஏமாற்றத்திலே அந்த குழந்தையை வெறுக்கத் தொடங்குவார்கள். தேவன் கொடுக்கும் பெண் குழந்தைகளைப் பாரமாய் நினைப்பவர்களையும், வெறுப்பவர்களையும், தேவன் ஒருக்காலும் ஆசீர்வதிக்க மாட்டார். அன்றைக்கு சிப்பிராள், பூவாள் என்ற இரண்டு பெண்கள், தேவனுக்கு பயந்து ஆண் குழந்தைகளை காப்பாற்றினார்கள். தேவன் அவர்களையும் ஆசீர்வதித்தார். மேலும் அவர்கள் மூலமாய் இஸ்ரயேல் மக்களையும் ஆசீர்வதித்தார்.

யோகெபேத் - யாத்திராகமம் 2:1-3


             எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து, இஸ்ரயேல் ஜனங்களை விடுதலையாக்கும் பணியிலே, முக்கிய இடத்தைப் பெற்றவர் மோசே. அவருடைய மூத்த சகோதரன் ஆரோன் மற்றும் அவருடைய சகோதரி மிரியாம் ஆவாள். இந்த மூன்று பேரையும் பெற்றெடுத்த தாயின் பெயர் தான் “யோகெபேத்”. இந்த பெயருக்கு “கர்த்தருக்கு கனத்தையும், மகிமையையும் செலுத்துகிறவள்” என்று பொருள். யோகெபேத் எகிப்திலே லேவிக்கு பிறந்த குமாரத்தி (எண்ணா 26:59). லேவி கோத்திரத்தார் எப்பொழுதும் கர்த்தருடைய பட்சத்திலே வைராக்கியமாய் இருப்பார்கள். அந்த வைராக்கியத்தின்படியே மோசே, மிரியாம், ஆரோன் என்பவர்களை வளர்த்து உருவாக்கினாள். மோசே பிறந்தசமயம், பிரசவிக்கும் ஆண் குழந்தைகள் கொல்லப்பட வேண்டும் என்ற கட்டளையை எகிப்தின் ராஜா அறிவித்திருந்தான். பெண் குழந்தை தான் பிறக்க வேண்டும் யோகெபேத் தேவனிடம் வேண்டியிருக்கலாம். ஏனென்றால் ஆண் குழந்தை பிறந்தால் உடனே கொல்லப்பட்டுவிடுமே. அநேக நேரங்களில் நம்முடைய எதிர்ப்பார்ப்புகளும் நினைவுகளும் கூட சூழ்நிலைக்கு சாதகமாய் செயல்படுகின்றது. கர்த்தர் சொல்கின்றார் “என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல, உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று” (ஏசாயா 55:8). தேவனுடைய திட்டங்களும், நினைவுகளும் மட்டுமே உங்களுடைய எதிர்பார்ப்புகளாகவும் நினைவுகளாகவும் இருக்க வேண்டும். ஒருவேளை அழகான ஆண் குழந்தை மோசே பிறந்ததும் யோகெபேத்தின் உள்ளம் வேதனைப்பட்டிருக்கும். ஆனாலும் அந்த வேதனையானது பார்வோனுக்கு பயப்படும் பயத்தை தரவில்லை. மாறாக அந்த குழந்தையை ஒளித்துவைக்கத் துணிந்தாள் யோகெபேத். இன்றைக்கு அநேக பெண்கள் எதிரியாகிய பிசாசைக் கண்டு பயப்படுகின்றார்கள். சூழ்நிலைகளைக் கண்டு அஞ்சுகின்றார்கள். யோகெபேத் போல துணிச்சலுடன் பெண்கள் செயல்பட வேண்டும். அப்பொழுது கர்த்தர் உங்கள் மூலமாக தமது திட்டத்தை செயல்படுத்துவார்.

                       மூன்று மாதம் மோசேயை ஒளித்து வைத்தாள். வேவுகாரர்களும் கண்காணிப்பவர்களும் சுற்றி சுற்றி வந்து குழந்தைகளைத் தேடியிருப்பார்கள். பிறந்த குழந்தையை அழவிடாமல் பாதுகாப்பதென்றால் ஒரு தாயானவள் எவ்வளவாய் பாடுபட்டிருக்க வேண்டும்; எவ்வளவாய்த் தன்னைத் தியாகம் பண்ணியிருக்க வேண்டும். “குழந்தையை அப்புறம் ஒளித்து வைக்கக் கூடாமல், ஒரு நாணற்பெட்டியை எடுத்து, அதற்குப் பிசினும் கீலும் பூசி, அதிலே பிள்ளையை வளர்த்தி, நதியோரமாய் நாணலுக்குள்ளே வைத்தாள்” (யாத் 2:3). பிசினும் கீலும் என்றால் ஆங்கிலத்தில் ஸ்லைம் மற்றும் பிட்ச் (Slime and Pitch) ஆகும். ஸ்லைம் (Slime) என்பது நைல் நதியில் உள்ள களி மண் ஆகும். பிட்ச் (Pitch) என்பது ரோடு அமைக்க பயன்படுத்துவது போன்ற ஒரு வித தார் (Mineral tar) ஆகும். இந்த பிசினும் கீலும் பூசினால் நாணற்பெட்டிக்குள் தண்ணீர் உட்புகமாட்டாது என்பதை அறிந்த யோகெபெத், பிசினும் கீலும் பூசி தண்ணீர் புகாத நாணற்பெட்டியை உருவாக்கினாள். குழந்ததையைக் காப்பாற்ற எத்தனை முயற்சி எடுத்திருக்கின்றாள் பாருங்கள். ஒருவேளை இதை அவள் சரிவர செய்யாமலிருந்திருந்தால் மோசே மூச்சு திணறி இறந்திருப்பார் அல்லது நீரில் மூழ்கியிருப்பார். இதை வாசிக்கின்ற பெண்களாகிய நீங்களும் உங்கள் திறமைகளைப் பயன்படுத்தி உங்கள் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும். பிள்ளையைப் பெட்டிக்குள் கிடத்தி, சும்மா விட்டுவிடாமல், பார்வோன் குமாரத்தி வருகின்ற இடமாக, நேரமாகப் பார்த்து தண்ணீரில் விட்டாள். இதேப்போல பெண்கள் சிந்தித்து செயல்பட வேண்டும். இத்தாயின் தியாக உள்ளத்தைப் பார்த்த தேவன், பிள்ளை ராஜகுமாரத்திக்கு சொந்தமாகிவிட்டபோதும், சொந்தத் தாயே தன் பிள்ளைக்குப் பாலூட்டி வளர்க்கக்கூடிய வாய்ப்பை அளித்தார்.

                   யோகெபெத் வாழ்ந்த சமயம் இஸ்ரவேல் மக்கள் அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் மேல் கடினமான சுமை சுமத்தப்பட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் வாழ்ந்த இந்த இளம் தாய் தன் பிள்ளைகளுக்கு, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு என்பவர்களின் தேவனாகிய கர்த்தரின் வழிகளை போதித்தாள். அவர்களை வளர்க்கும்போது வல்லமையுள்ள தேவனைப் பற்றியும், அவர் அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்க வல்லவர் என்றும் போதித்தாள். ஆகவே தேவன் அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். யோகேபெத் எத்தனை அருமையான ஒரு தாயாக இருந்திருகின்றாள். ஒரு தாய் தன் பிள்ளைகளுக்கு சொத்து சுகம் தேடிக் கொடுத்தால் மட்டும் போதாது, அவர்களை கர்த்தரின் வழிகளில் நடத்த வேண்டும். நாம் தேடி வைக்கிற பணத்தினால் நம் பிள்ளைகள் நம்மை நினைவு கூற மாட்டார்கள். நாம் எவ்வளவு தூரம் அவர்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தோம் என்பதைக்கொண்டுதான் நினைவு கூறுவார்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை விடுதலை வீரர்களாகப் பார்க்க வேண்டும். மேலும் பெற்றோர்கள் ஜெபத்திலும், வேத வாசிப்பிலும் தரித்திருக்கும் ஒரு நல்ல முன் மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டும. அப்பொழுது உங்கள் பிள்ளைகளும் சாதிப்பது நிச்சயம்.

மிரியாம் - யாத்திராகம் 2:4-8


             மிரியாம் என்ற வார்த்தைக்குப் “கசப்பு” என்று அர்த்தம். எகிப்து மக்கள் கடுமையாக இஸ்ரவேல் மக்களை ஒடுக்கிய கால கட்டத்தில் இந்த பெண் குழந்தை பிறந்தமையால், இதற்க்கு “கசப்பு” என்று அர்த்தம் தரும் பெயரை வைத்தாக யூத ரபிகள் தெரிவிகின்றனர். இவள் மோசே ஆரோன் என்பவர்களின் சகோதரி. குழந்தை மோசேயை நாணல் பெட்டியில் வைத்து நைல் நதியோரமாய் நாணல் நிறைந்த கரையில் மிதக்க வைத்து, குழந்தையின் அக்காவாகிய மிரியாமை தூரத்தில் இருந்து காவல் காக்கும்படி செய்தாள் மோசேயின் தாயாகிய யோகெபெத். மிரியாமுக்கு அப்பொழுது பத்திலிருந்து பதின்மூன்று வயதிற்குள் தான் இருந்திருக்கும்.

                       குழந்தையான தன் சகோதரன் மோசேயின் நாணல்பெட்டியை நைல் நதிக் கரையில் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் மிரியாம். பார்வோனின் ராஜகுமாரத்தி தன் தாதியரோடு நீராட அங்கு வருகிறாள். பார்வோன் குமாரத்தி நாணல்பெட்டியை திறப்பதை பார்த்த மிரியாம், உடனே ராஜகுமாரத்தியிடம் பேச நெருங்குகின்றாள். நிச்சயமாக அந்த சிறு வயதில் மிரியாம் செய்த தைரியமான செயல் மோசே என்னும் விடுதலை வீரரை முழுமையாக உருவாக்க காரணமாக இருந்தது. குழந்தையை வளர்க்க ஒரு எபிரெயத் தாயை அழைத்து வருவதாக சொல்லி, தன்னுடைய தாயாரையே அந்தக் குழந்தையை வளர்க்கத் தக்கதாக ஆலோசனை கூறினாள் (யாத். 2:.4,7). சிறுபெண் மிரியாமைக் கொண்டு தேவன் மோசேயின் உயிரைக் காப்பாற்றினார். மிரியாம் தைரியமாய் ராஜகுமாரத்தியை அணுகி ஞானமாய் பேசி தனது தாயே மோசேயை வளர்க்கும் படியான அரச கட்டளையுடன் வருகின்றாள். யார் எபிரேய ஆண் குழந்தைகளை கொல்ல சட்டம் இயற்றினாரோ அவருடைய வீட்டிலேயே மோசே வளர்க்கப்பட்டார்.

                   அநேக கிறிஸ்துவ குடும்பங்களில் மருமகள் மாமியார் பிரச்சனை இருக்கும். கணவன் குடும்பத்தாருக்கும் மனைவி குடும்பத்தாருக்கும் பிரச்சனை இருக்கும். இதை வாசிக்கின்ற உங்களுக்கும் அந்த அனுபவம் நேரிட்டிருக்கலாம். உங்கள் பேரில் மற்றவர்களுக்கு கசப்பு இருந்தாலும், கர்த்தர் உங்கள் மூலமாக தித்திக்கும் காரியங்களை செய்யப்போகின்றார். நீங்கள் பேசுகின்ற விஷயத்தில் ஞானமாய் செயல்பட வேண்டும். மிரியாம் என்ற பெயரின் பொருள் கசப்பாக இருந்தாலும் அவள் செய்த காரியம் தேனிலும் மதுரமானது என்றே சொல்ல வேண்டும். இயேசுவுக்காய் நீங்கள் வைரக்கியமாய் வாழ்ந்து, அழிந்து போகும் மக்களைக் காப்பாற்ற முயன்றால், உங்களுடைய வாழ்க்கையையும் கர்த்தர் மதுரமாக மாற்றுவார்.

             அதுமட்டுமல்லாது மிரியாம்தான் வேதாகமத்தின் முதலாவது பெண் தீர்க்கதரிசியாக இருக்கின்றாள். “ஆரோனின் சகோதரியாகிய மிரியாம் என்னும் தீர்க்கதரிசியானவளும் தன் கையிலே தம்புரை எடுத்துக்கொண்டாள்; சகல ஸ்திரீகளும் தம்புருகளோடும் நடனத்தோடும் அவளுக்குப் பின்னே புறப்பட்டுப்போனார்கள். மிரியாம் அவர்களுக்குப் பிரதிவசனமாக: கர்த்தரைப் பாடுங்கள், அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார் என்று பாடினாள்” யாத் 15:20-21). இந்த சம்பவம் நடந்து சுமார் 3300 வருஷங்கள் இருக்கும். மிரியாம் கடுமையான அடிமைத்தனத்தில் வாழ்ந்தாலும், இன்னிசையைத்தரும் தம்புரு என்னும் வாத்தியத்தை வாசிக்க அவள் பழகியிருந்தாள். அதோடுகூட பாட்டுப்பாடி நடனமாடவும் அவள் அறிந்திருந்தாள். கவி நடையில் பாடல் எழுதும் ஆற்றலையும் பெற்றிருந்தாள். ஆகவேதான் வேதாகமத்தின் முதல் பெண் தீர்க்கதரிசியாக மிரியாம் அறிவிக்கப்படுகின்றாள். நீங்கள் முதன்மையானவர்களாக இருக்க விரும்பினால் உங்களுக்குள் அநேக திறமைகள் இருக்க வேண்டும். அடிமையாக வாழ்ந்த மிரியாமினால் இவ்வளவு காரியங்களை கற்றுத் தெரிந்திருக்க முடியும் என்றால், நிச்சயம் உங்களாலும் சாதிக்க முடியும்.

பார்வோனின் மகள் பித்தியா - யாத்திராகமம் 2:5-10


             மோசேயை முழு மனிதனாக வளர்த்ததில் முக்கிய பங்கு பார்வோனின் மகள் பித்தியாவிற்கு உண்டு. பித்தியா (Bithiah) என்ற பெயரின் அர்த்தம் “யெகோவாவின் மகள்” (Daughter of Yaweh) என்பதாகும். எப்படி பார்வோனுடைய மகளுக்கு “யெகோவாவின் மகள்” என்ற பெயர் வந்திருக்கும். பித்தியாவிற்கு யார் இந்த பெயரை வைத்தார்கள் என்பது வேதத்தில் வெளிப்படுத்தப் படவில்லை. யாத்திராகமம் 2:10 வசனத்தில் அவள் மோசேயை, “அவளுடைய குமாரனானாக” கூறுகின்றாள். இதை முன்னறிந்த தேவன், இவளை தன்னுடைய மகளாக ஏற்றுக் கொண்டதின் அடையாளமாக பித்தியா என்ற பெயர் வைக்கப்பட்டதாக யூத மரபுகள் தெரிவிகின்றன. இவள் எபிரெய குழந்தையை தனது மகன் என்று கூறியமையால் பித்தியாவை திருமணம் செய்ய அநேக எகிப்தியர்கள் தயங்கியிருப்பார்கள். பித்தியா யூதா கோத்திரத்தில் வந்த மேரேத் என்பவரை விவாகம் செய்ததாக I நாளாகமம் 4:18-ல் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய பொழுது பித்தியாயும், தனது வளர்ப்பு மகனாகிய மோசேயுடன் சென்றதாக யூத பாரம்பரியம் தெரிவிக்கின்றது. மேலும் பித்தியா தனது தகப்பன் வழியில் விக்கிரக ஆராதனை செய்பவளாக அல்லாமல் யெகோவா தேவனை தொழுது வந்துள்ளதாகவும், அதினால் தான் தேவன் பித்தியாவை யூத கோத்திரத்தில் இணைய தேவன் அனுமதித்ததாகவும் யூத ரபிகள் தெரிவிக்கின்றனர். பித்தியாவிற்கு இருந்த கருணை உள்ளம் மோசேயை தனது குழந்தையாக தத்தெடுக்க செய்து அவரது உயிரைக் காப்பாற்றியது. இதை வாசிக்கின்ற நீங்களும் கருணை உள்ளத்துடன் எளியவர்களுக்கு உதவி செய்ய வேண்டும். பித்தியா தனது தகப்பன் பார்வோனைக் கண்டு அஞ்சாமல் தைரியமாக மோசேயை தன் சொந்த மகனாக எற்றுக் கொண்டதால், தேவனும் அவளை தமது சொந்த யூத கோத்திரத்தில் இணைத்துக் கொண்டார். மோசே பெயரின் பொருள் எபிரெயத்தில் “தண்ணீரிலிருந்து எடுக்கப்பட்டவன்” என்றும் எகிப்திய மொழியிலே “மகன்” என்றும் பொருள்படும். பித்தியா என்ற பெயரையும், மோசே என்ற பெயரின் எகிப்திய அர்த்தத்தையும் இணைத்து பார்த்தால் (யெகோவாவின் மகள் + யெகோவாவின் மகளுடைய மகன்) தேவன் எவ்வளவாய் பித்தியாவை நேசித்துள்ளார் என்பதை நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.

                       எகிப்து நாட்டு மக்கள் அனைவரும் எபிரெய மக்களை அடிமைகளாக பார்த்த பொழுது, ராஜகுமாரத்தி பித்தியா மட்டும் எபிரெய குழந்தை மோசேயை தனது சொந்த மகனாக பார்த்தார். மேலும் மோசேக்கு அரசர்களின் குழந்தைகளுக்கு கற்று கொடுக்கப்படும் எல்லா கலைகளும் கற்றுக் கொடுக்கப்பட்டது. ஒரு தேசத்தையே வழிநடத்தக் கூடிய திறமையுள்ளவராக அவரை மாற்றியது. இன்றைக்கு சமுதாயத்தில் ஜாதி பாகுபாடு உள்ளது. உண்மையாக இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டவர்கள் நிச்சயமாக ஜாதி பார்க்கமாட்டார்கள். யூதர்கள் சமாரியர்களை கீழ் ஜாதி மக்களாய் பார்க்கையில், தேவ குமாரன் இயேசு சமாரிய பெண்ணிடம் தாகத்துக்கு தண்ணீர் கேட்டும், சமாரியரிடத்தில் இரண்டு நாள் தங்கியும் (யோவான் 4:8,40) தான் ஜாதி பாகுபாடு பார்ப்பவர்களுக்கு எதிரானவர் என்பதைக் தெளிவாக வாழ்ந்து காண்பித்துள்ளார். அவரைப் பார்த்து எரிச்சலடைந்த யூதர்கள் அவரை சமாரியனென்றும், பிசாசு பிடித்தவர் என்றும் பழித்து பேசினார்கள் (யோவான் 8:48). ஆயினும் நற்செய்தி எல்லா மக்களுக்கும் அறிவிக்கப்பட வேண்டும் என்ற சத்தியம் அப்போஸ்தலர் 1:8-லும் உள்ளதே. ஜாதி பாகுபாடுகள் ஒருநாளும் நற்செய்தியை அறிவிக்கத் தடையாய் இருக்கக் கூடாது. ராஜகுமாரத்தி பித்தியா அன்றைக்கு ஜாதி பாகுபாடு பார்த்திருந்தால் மோசே என்ற விடுதலை வீரர் மரித்திருபாரே. இயேசு அன்றைக்கு சமாரியர்களை நேசிக்காமல் இருந்திருந்தால் அந்த தேசத்திற்கே நற்செய்தி சென்றிருக்காதே. இயேசுவைப் போல நீங்களும் நானும் ஜாதி பார்க்காமல் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்து நற்செய்தியை அறிவிக்க கடமைப் பட்டிருக்கின்றோம்.

சிப்போராள் - யாத்திராகமம் 2:11 - 4:26


             சிப்போராள் மீதியானிய தேசத்து பெண்ணும் மோசேயின் மனைவியும் ஆவாள். சிப்போராள் என்ற பெயரின் பொருள் “பறவை” ஆகும். சிப்போராள் மோசேக்கு பாலைவனத்தில் கிடைத்த அற்புத பறவை என்றே சொல்ல வேண்டும். மோசே, 40 வருடங்கள் எகிப்து அரண்மனையில், பார்வோன் குமாரத்தியின் செல்ல மகனாக, பார்வோன் ராஜாவின் பேரனாக எல்லாவித செல்வங்களையும் அனுபவித்து, கலைகளையும் கற்று வளர்ந்தார். தான் ஒரு எகிப்தியன் அல்ல, ஒரு இஸ்ரவேலன் என்பதையும் மோசே அறிந்திருந்தார், தன்னுடைய சொந்த அப்பாவும் அம்மாவும் இஸ்ரவேல் அடிமைகள் என்பதையும் அறிந்திருந்தார். ஒருநாள், தன்னுடைய ஜனத்தார் எப்படி இருக்கிறார்கள் என்று பார்த்து வர மோசே தீர்மானித்தார், அப்போது அவருக்கு 40 வயது. இஸ்ரவேல் ஜனங்கள் படுபயங்கரமாக நடத்தப்பட்டு வந்தார்கள். எகிப்தியன் ஒருவன் ஓர் இஸ்ரவேல் அடிமையை அடித்துக் கொண்டிருப்பதை மோசே பார்த்தார். உடனே சுற்றிமுற்றி நோட்டமிட்டு, எவரும் கவனிக்காதபோது அந்த எகிப்தியனை அடித்துப் போட்டார். பின்பு அவனுடைய உடலை மணலில் புதைத்துப்போட்டார். பார்வோன் இதைக் கேள்விப்பட்டபோது, மோசேயைக் கொல்ல வகை தேடினான். ஆகவே மோசே எகிப்தை விட்டு தப்பியோடி, மீதியானிய தேசத்தில் போய்த் தங்கி, ஒரு துரவண்டையிலே உட்கார்ந்திருந்தார். மீதியான் தேசத்து ஆசாரியன் எத்திரோனுக்கு ஏழு குமாரத்திகள் இருந்தார்கள். அவர்கள் மோசே அமர்ந்திருந்த துரவண்டை வந்து தங்கள் தகப்பனுடைய ஆடுகளுக்கு தண்ணீர் மொண்டு கொடுத்தபோது, அங்கிருந்த மேய்ப்பர்கள் அவர்களைத் துரத்தினார்கள், அப்பொழுது மோசே அவர்களுக்கு துணைநின்று அவர்கள் மந்தைக்கு தண்ணீர் காட்டினார். ஆடுகளுக்கு தண்ணீர் காட்டிய நிகழ்வின் மூலம் தான் ஒரு நல்ல மேய்ப்பன் என்பதை நிரூபித்தார் மோசே. (யாத் 2:16-17)

                       எகிப்துடன் ஒப்பிடுகையில் மீதியானிய தேசம் ஒரு அற்பமான தேசமாகும். ஆபிரகாமுக்கும், கேத்தூராளுக்கும் பிறந்த மகன் தான் மீதியான். அவனுடைய சந்ததியார்கள் மீதியானிய தேசத்திலே வாழ்ந்து வந்தார்கள் (ஆதி. 25:1). மீதியான் என்ற வார்த்தைக்கு, “கலகம் செய்கிறவன்” என்று அர்த்தம். இவை எதையும் மோசே பொருட்படுத்தாமல, மீதியானிய தேசத்தில் ஆசாரியனாயிருந்த எத்திரோவின் ஆடுகளை மேய்க்கத் துவங்கினார். அங்கே எத்திரோ, தன் மகளான சிப்போராளை மோசேக்கு மனைவியாகக் கொடுத்தார். அது ஒரு புதிய வாழ்க்கையின் ஆரம்பம். எகிப்தின் 40 வருட வாழ்க்கை முற்றிலும் மறையுமட்டும், ஒள்றிரண்டு வருடங்கள் அல்ல, நாற்பது வருடங்கள் ஆடுகளை மேய்த்துக்கொண்டிருக்கிறார். இந்த 40 வருடத்தில் மோசே தாழ்மையின் உருவாக மாறிவிட்டார். மோசேவை விடுதலை வீரனாக உருமாற்றவே இந்த சூழ்நிலைகளை கர்த்தர் அனுமதித்தார். ஒருவேளை உங்களுடைய வாழ்வும் வனாந்திரத்தின் வழியாக செல்வதைப் போல இருக்கின்றதா? கர்த்தர் உங்களை உருமாற்றிக்கொண்டிருன்கின்றார் என்பதை மறந்து விடாதீர்கள்.

                   சிப்போராள் மோசேயின் மனைவியாக இருந்தாலும் மோசையைப் போல் அதிகம் பேசப்பட்டவள் அல்ல. மோசே குழந்தையாய் இருந்த பொழுது அவளது தாய் (யோகெபேத்) அவரைக் காப்பாற்றியதைப் போலவே, அவரது மனைவியும் இக்கட்டான நேரத்தில் மோசேவைக் காப்பாற்றியுள்ளார். பெரிய தீர்க்கதரிசியின் மனைவியான இவள் துரிதமாக செயல்படக் கூடியவள் என்பதை நாம் இந்த சம்பவத்தின் மூலம் அறியலாம். மோசேக்கும் – சிப்போராளுக்கும் இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தன. “நான் அந்நிய தேசத்திலே பரதேசியானேன் என்று மோசே சொல்லி, ஒரு மகனுக்குக் கெர்சோம் என்று பேரிட்டிருந்தான்”. இரண்டாவது மகனுக்கு “என் பிதாவின் தேவன் எனக்குத் துணைநின்று பார்வோனின் பட்டயத்துக்கு என்னைத் தப்புவித்தார் என்று சொல்லி, மற்றவனுக்கு எலியேசர் என்று பேரிட்டிருந்தான்” (யாத் 18:3-4).

             கர்த்தர் தமக்கு சொந்தமான ஜனமாக இஸ்ரவேலைத் தெரிந்து கொண்டபோது அவர்களுக்கு விருத்தசேதனம் பண்ண வேண்டும் என்ற புது கட்டளையையும் கொடுத்தார் (ஆதி 17:10). இதை ஏன் செய்யவேண்டும் என்று அவர்களுக்கு விளக்கி கூறியதாக வேதம் சொல்லவில்லை. ஆனால் ஒவ்வொரு குழந்தையும் இரத்தம் சிந்தி கதறும் பொழுதும் கர்த்தர் தனது சொந்த குமாரனாகிய இயேசுவும் இதே போல இரத்தம் சிந்தி கதறுவதை தேவன் ஒத்திகை பார்த்திருப்பார். பாவங்களுக்காக இயேசு மரித்து, மக்களை தூயமைப்படுத்துவது அவசியம் என்பதை நினைவுகூர்ந்திருப்பார். இஸ்ரவேல் மக்கள் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்தனர். மோசேயின் தாய் தகப்பன் இருவரும் தேவனுக்கு கீழ்ப்படிந்தவர்கள் ஆதலால் தங்கள் குமாரனாகிய மோசேக்கு நிச்சயமாக விருத்தசேதனம் செய்திருப்பார்கள். மோசே தன்னுடைய மூத்த மகனுக்கு எபிரெய முறைப்படி விருத்தசேதனம் செய்திருப்பார். மீதியானிய பெண்ணும் மோசேயின் மனைவியுமாகிய சிப்போராள், தனது குழந்தையின் இரத்தக் காட்சியையும் கதறலையும் பார்த்த பின்பு மோசேயை கடுமையாக எதிர்த்திருக்கக் கூடும். ஆதலால் மூத்தவன் கெர்சோமுக்கு விருத்தசேதனம் செய்த மோசே இளையமகன் எலியேசருக்கு விருத்தசேதனம் செய்யாமல் விட்டிருக்கலாம் என அநேக வேதாகம வல்லுநர்கள் எண்ணுகின்றனர்.

             இப்படிப்பட்ட நிலையில் “மோசே தன் ஆடுகளை மேய்த்து வந்து, ஒருநாள், தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான். அங்கே கர்த்தருடைய தூதனானவர் ஒரு முட்செடியின் நடுவிலிருந்து உண்டான அக்கினிஜுவாலையிலே நின்று அவனுக்குத் தரிசனமானார். அப்பொழுது அவன் உற்றுப்பார்த்தான்; முட்செடி அக்கினியால் ஜுவாலித்து எரிந்தும், அது வெந்துபோகாமல் இருந்தது.. அவன் பார்க்கும்படி கிட்ட வருகிறதைக் கர்த்தர் கண்டார். முட்செடியின் நடுவிலிருந்து தேவன் அவனை நோக்கி: மோசே, மோசே என்று கூப்பிட்டார். அவன்: இதோ, அடியேன் என்றான். அப்பொழுது கர்த்தர்: எகிப்திலிருக்கிற என் ஜனத்தின் உபத்திரவத்தை நான் பார்க்கவே பார்த்து, ஆளோட்டிகளினிமித்தம் அவர்கள் இடுகிற கூக்குரலைக் கேட்டேன், அவர்கள் படுகிற வேதனைகளையும் அறிந்திருக்கிறேன். நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார். (யாத் 3:1-10). முதலில் தயங்கிய மோசே, பின்னர் திடமனதுடன், “தன் மனைவியையும், தன் பிள்ளைகளையும் கழுதையின் மேல் ஏற்றிக் கொண்டு எகிப்து தேசத்துக்கு திரும்பினான். வழியில் தாங்கும் இடத்தில் கர்த்தர் அவனுக்கு வெளிப்பட்டு அவனைக் கொல்லப் பார்த்தார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அவன் கால்களுக்கு முன்பாக எறிந்து நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன் என்றாள்” (யாத் 4:20-25). இதை வாசிக்கும் நமக்கு, கர்த்தர் ஏன் மோசேயிடம் இப்படி நடந்து கொண்டார்? தேவன் அன்பானவர், இரக்கமும், கிருபையும் உள்ளவர் தானே என்று யோசிக்கலாம். இப்படிப்பட்ட செயல்களுக்குப் பின்னால் உள்ள அர்த்தத்தையும், அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

             இப்பொழுது மோசே இஸ்ரவேல் மக்களின் தலைவனாக எகிப்துக்கு செல்கிறான். தேவனாகிய கர்த்தர் தம்முடைய பிள்ளைகளான மோசேயும், சிப்போராளும் தேவனுடைய கட்டளைக்குக் கீழ்ப்படியாதவர்கள், தங்கள் பிள்ளைக்கு விருத்தசேதனம் செய்யாதவர்கள் என்ற குறையோடு இஸ்ரவேல் மக்களின் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பவில்லை. அதனால் வழியில் இடைப்பட்டு சிப்போராள் தன் குமாரனுக்கு விருத்தசேதனம் செய்யாததால் மோசேயின் உயிருக்கு ஆபத்து நேரிடும் என்று பட்டயத்தோடு வருகின்றார். அப்பொழுது சிப்போராள் ஒரு கருக்கான கல்லை எடுத்து, தன் புத்திரனுடைய நுனித்தோலை அறுத்து, அதை அந்த கர்த்தருடைய தூதனின் கால்களுக்கு முன்பாக எறிந்து தான் தேவனுடைய கட்டளைக்கு முழுமையாக கீழ்ப்படிவதை தெரிவித்தாள். மேலும் “நீர் எனக்கு இரத்த சம்பந்தமான புருஷன்” என்று சொல்லி மீதியானிய பெண், தேவனுடைய சொந்த ஜனமாக மாறுவதை அறிக்கை செய்தாள். துரிதமாகச் செயல்பட்டு மோசேயின் உயிரைக் காப்பாற்றினாள் சிப்போராள்.

             தேவன் சிப்போராளிடம் எதிர்பார்த்தது எல்லாம் அவள் தேவனுடைய கட்டளைக்கு கீழ்ப்படிய வேண்டும் என்பது தான். இதைத் தான் தேவன் ஒவ்வொரு குடும்பத்திலும் எதிர்பார்க்கின்றார். வேதாகமம் சொல்கின்றது “புத்தியுள்ள ஸ்திரீ தன் வீட்டைக்கட்டுகிறாள்; புத்தியில்லாத ஸ்திரீயோ தன் கைகளினால் அதை இடித்துப்போடுகிறாள்” (நீதி 14:1) என்று. அன்றைக்கு சிப்போராள் புத்தியுடன் செயல்பட்டு தேவனுக்கு கீழ்ப்படிந்தமையால் அவளுடைய குடும்பம் காப்பாற்றப்பட்டது. தேவனுடைய வார்த்தைக்கு செவிகொடுத்தலும், கீழ்ப்படிதலும், உங்களுடைய குடும்பத்தில் காணப்படுகிறதா? இன்று உன் குடும்பத்தில் இருக்கிற ஆபத்தான சூழ்நிலைக்கு உங்களுடைய கீழ்ப்படியாமையும் ஒரு காரணமாயிருக்கக் கூடும்! கீழ்ப்படியாமை நம் தலைக்குக் கத்தியைக் கொண்டு வரும் என்பதை வேதத்தில் இருந்து அறிகின்றோம். ஏனெனில் நாம் அவருடைய வார்த்தைக்கு செவிகொடுக்காமல் இருக்கும் போது கர்த்தரால் நம்மைக் காத்து வழிநடத்த முடியாது. நீங்கள் கர்த்தருக்குக் கீழ்ப்படிந்தால் “அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும். இரவில் உண்டாகும் பயங்கரத்துக்கும், பகலில் பறக்கும் அம்புக்கும், இருளில் நடமாடும் கொள்ளைநோய்க்கும், மத்தியானத்தில் பாழாக்கும் சங்காரத்துக்கும் பயப்படாதிருப்பாய். உன் பக்கத்தில் ஆயிரம்பேரும், உன் வலதுபுறத்தில் பதினாயிரம்பேரும் விழுந்தாலும், அது உன்னை அணுகாது. (சங்கீதம் 91:4-7)

நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது

             சிப்பிராள், பூவாள் என்ற மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்து ஆண் குழந்தைகளைக் காப்பாற்றியதால் மோசேயும் காப்பாற்றப்பட்டார். ஆகவே தேவன் அவர்களுக்கு நன்மை செய்தார், மேலும் அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார். யோகெபெத் தியாக உள்ளத்துடன் குழந்தையைக் காப்பாற்றி, திறமையாக நாணல்பெட்டி மூலமாக மோசேவைக் காப்பாற்றியதால், தேவன் அவளுடைய மூன்று பிள்ளைகளையும், இஸ்ரவேலை அடிமைத்தனத்திலிருந்து மீட்கும் மிகப்பெரிய ஊழியத்துக்கு அழைத்ததைப் பார்க்கிறோம். மிரியாம் ஞானமாய் துணிவுடன் ராஜகுமாரத்தியுடன் பேசி மோசேயை காப்பற்றியதின் மூலம் கர்த்தர் அவளை வேதாகமத்தின் முதல் தீர்க்கதரிசியாக மாற்றினார். ராஜகுமாரத்தி பித்தியா எபிரெய குழந்தை மோசேயை தனது சொந்த மகனாக ஏற்றுக் கொண்டு காப்பாற்றியதால் தேவன் அவளை யூதேயா கோத்திரத்துடன் இணைத்து தமது சொந்த மகளாக மாற்றினார். சிப்போராள் மீதியானிய தேசத்து பெண்ணாக இருந்த போதிலும் தேவனுக்கு கீழ்ப்படிந்து மோசேயின் உயிரைக் காப்பாற்றிய படியால் அவளையும் தேவன் இஸ்ரவேல் பயணத்தில் இணைத்துக் கொண்டார்.

                       “உன் காலைத் தள்ளாடவொட்டார்; உன்னைக் காக்கிறவர் உறங்கார்” (சங்கீதம் 121:3) என்ற வாக்குத்தத்தம் உங்கள் குடும்பத்துக்கு சொந்தமானது. தேவனுக்குக் கீழ்படிந்த ஆறு பெண்களையும் தேவன் உயர்த்தினார். நன்மைகள் செய்தார். ஆசீர்வதித்தார். குடும்பங்களை தழைக்கும்படி செய்தார். நீங்களும் குடும்பமாக தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியும் போது கர்த்தர் உங்கள் குடும்பத்தை சுற்றி ஒரு பாதுகாப்பு வளையமிடுகிறார். அதை யாரும் முறிக்க இயலாது. “உன்னை தொடுகிறவன் என் கண்மணியைத் தொடுகிறான்” (சகரியா 2:8) என்று கர்த்தர் உங்கள் குடும்பத்தைப் பார்த்து சொல்ல வேண்டும். நீங்களும் இந்த ஆறு பெண்களைப் போல கர்த்தருக்குக் கீழ்ப்படிந்து உங்கள் குடும்பத்தின் ஆசீர்வாதத்தைப் சுதந்தரித்துக் கொள்ளுங்கள்!