home >> உப்பு நல்லது தான்
உப்பு நல்லது தான்


             உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார். லூக்கா 14:34-35.

                       இயேசுவின் இந்த போதனையானது மத்தேயு (5:13), மாற்கு (9:50) மற்றும் லூக்கா (14:34) என்ற மூன்று நற்செய்தி நூல்களில் வருவதிலிருந்து ஆதித்திருச்ச்பை மக்கள் இயேசுவின் இந்த போதனைக்கு கொடுத்த முக்கியத்துவத்தை நன்கு அறிய முடிகின்றது. இது இயேசு கூறிய கடுமையான போதனைகளில் ஒன்று ஆகும். ஆனால் ஒவ்வொரு கிறிஸ்த்துவ விசுவாசியும் கடைபிடிக்க வேண்டிய கட்டாய போதனை ஆகும். அதினால் தான் வேதத்தில் இதை மூன்று எழுத ஆவியானவர் அனுமதித்து உள்ளார்.

                   உப்பு நல்லது தான், ஆனால் அது தூய்மையாக வெண்மையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் குப்பையில் கொட்டப்படும் என்ற இயேசுவின் கருத்தை எல்லா மனிதர்களும் ஏற்றுக்கொள்வார்கள். ஏனென்றால் எவ்வளவு விலை உயர்ந்த உப்பாக இருந்தாலும் அதில் சிறிதளவு தூசி கிடந்தால் உடனடியாக அதை குப்பையில் கொட்டி விடுவார்கள். சமையல் அறையில், சாப்பாட்டு மேசையில் என எல்லா இடத்திலும் மேன்மையான நிலையில் இருந்த உப்பு, தன்னிடத்தில் சிறிய தூசியை அனுமதிக்கும் பொழுது குப்பை தொட்டிக்கு செல்கின்றது, அதேபோல இயேசுவின் இரத்தத்தால் கழுவப்பட்ட நாமமும் கூட, பல்வேறு ஆசீர்வாதங்களைப் பெற்று சமுதாயத்தில் உயர்ந்த நிலையில் இருந்தாலும், பழைய பாவத்தை சிறிதளவு செய்து வந்தால், பரலோக ராஜ்யத்திற்கு வெளியே கொட்டிப் போடப்டுவோம் என்று இயேசு ஆணித்தரமாக கூறியுள்ளார்.

             இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுகொள்பவர்கள் முதலில் திருச்சபைக்கு பரிசுத்தமனவர்களாக (உப்பாக) இருக்க வேண்டும். இரண்டாவது உலகத்திற்கு பரிசுத்தமனவர்களாக இருக்க வேண்டும். மூன்றாவது தங்களுக்குள்ளே பரிசுத்தமனவர்களாக இருக்க வேண்டும். அதைக் குறித்து இந்த செய்தியில் தியானிக்கலாம்.

நீங்கள் திருச்சபைக்கு உப்பாயிருக்கிறீர்கள்


             “நீ படைக்கிற எந்த போஜனபலியும் உப்பினால் சாரமாக்கப்படுவதாக; உன் தேவனின் உடன்படிக்கையின் உப்பை உன் போஜனபலியிலே குறையவிடாமல், நீ படைப்பது எல்லாவற்றோடும் உப்பையும் படைப்பாயாக” (லேவியராகமம்2:13).

                       போஜனபலி எனபது சர்வாங்க தகன பலியாக நெருப்பிலே தகனிக்கப்படும் இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள் ஆகும். இவைகள் நெருப்பிலே தகனிக்கப்படுவதற்கு முன் அது உப்பினால் சாரமாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தேவன் மோசே மூலமாக இஸ்ரயேல் மக்களுக்கு கட்டளையிட்டார். ஒருவன் தன்னை அர்ப்பணித்து தேவனை ஆராதிக்க ஆலயத்திற்கு வந்தால் அவன் முதாலாவது உப்பினால் சாரமாக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது தனக்கான பரிசுத்ததை காத்துக் கொண்டவனாக தேவனுடைய பலிபீடத்திற்கு முன்பும் இயேசுவுக்கு முன்பும் வரவேண்டும். “கர்த்தருக்கு அவருடைய நாமத்திற்குரிய மகிமையைச் செலுத்தி, காணிக்கைகளைக் கொண்டுவந்து, அவருடைய சந்நிதியில் பிரவேசியுங்கள்; பரிசுத்த அலங்காரத்துடனே கர்த்தரைத் தொழுதுகொள்ளுங்கள்” (Iநாளா 16:29). ஆகவே ஆலயத்திற்கு செல்லும் உங்களுடைய பரிசுத்தத்தை காத்துக் கொண்டவர்களாக திருச்சபைக்கு செல்லுங்கள்.

                   இஸ்ரயேல் மக்கள் தேவனுடைய ஆலயத்திற்கு வரும் பொழுது, இளங்காளைகள், ஆட்டுக்கடாக்கள், ஆட்டுக்குட்டிகள், கோதுமை, உப்பு, திராட்சரசம், எண்ணெய் என ஏழு வகையான காணிக்கைகளை கொண்டு வருவார்கள் (எஸ்றா 6:9). இதில் ஐந்தாவது காணிக்கை உப்பு ஆகும். பழைய ஏற்ப்பாட்டு காலத்தில் ஆலயத்திற்கு வருபவர்கள் உப்பை காணிக்கையாய் கொண்டு வந்தார்கள். புதிய ஏற்ப்பாட்டு காலத்தில் திருச்சபை விசுவாசிகளாகிய நாம், ஆலயத்திற்கு செல்லலும் பொழுது உப்பைப் போல பரிசுத்ததோடு செல்ல வேண்டும். அநேக நேரங்களில் நாம் பரிசுத்தம் அடைய விரும்பி பரிசுத்ததிற்க்காய் ஆலயத்திற்கு செல்கின்றோம். ஆனால் வேதமோ நாம் பரிசுத்ததோடு ஆலயத்திற்கு வரவேண்டும்மென்று நம்மை எச்சரிகின்றது. பரிசுத்த உப்பாக நீங்கள் திருச்சபைக்கு சென்று, அந்த சபையில் உருவாக்கப்படும் திட்டங்களுக்கு சுவையைக் கொடுங்கள். இன்றைக்கு அநேகர் ஆலயத்திற்கு பரிசுத்த உப்பாய் செல்லாததால் தான், அந்த ஆலயம் உப்பில்லா உணவைப் போல சுவையற்று காணப்படுகின்றது.

                       திருச்சபையின் வளர்ச்சியானது ஒவ்வொரு விசுவாசியின் கைகளிலும் தான் இருக்கின்றது. தேவனுக்கு ஏற்ற பரிசுத்தம் உங்களிடத்தில் இருக்கும் பொழுது அநேகர் உங்களிடம் வந்து, உங்கள் மூலமாய் விடுதலையைப் பெற்றுக் கொள்வார்கள். பின்பு அவர்கள் சபைக்கு வருவார்கள். ஒரு மனிதன் சபைக்குள் வந்து விடுதலை அடைவதை விட, உங்கள் மூலமாக விடுவிக்கப்பட்டு சபைக்கு வரவேண்டும் என்று கர்த்தர் விரும்புகின்றார். நம்மில் அநேகர் புதிய நபர்களை சபைக்கு அழைத்து சென்றுவிட்டு, அதோடு நமது பணி முடிந்து விட்டது என்று சொல்லி, மற்றதையெல்லாம் போதகர் பார்த்துக்கொள்வார் என்று நழுவி விடுவோம். வேத வசனம் சொல்கின்றது நீங்கள் ஆலயத்திற்கு உப்பாக இருக்கின்றீர்கள். நீங்கள் தான் விடுதலையின்றி இருக்கும் அவர்கள் வாழ்விற்கு விடுதலை கொடுக்க வேண்டும். நீங்கள் தான் சுவையின்றி காணப்படும் அவர்கள் வாழ்வை சுவையுள்ளதாக மாற்ற வேண்டும். இன்றைக்கு அநேக புதிய நபர்கள் சபைக்கு வருகின்றார்கள். சபையானது ஆழமான சத்தியங்களை போதிக்கும் இடமாக இருக்கின்றது. அங்கு போதிக்கப்படும் ஆழமான சத்தியங்களை கேட்டு குழம்பிப்போய் பின்னர் சபைக்கு வருவதை நிறுத்தி விடுவார்கள். ஆகவே சபைக்கு வருகின்ற புதிய நபர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் தான் வர வேண்டும். அப்பொழுது தான் இருபுறமும் கூர்மையான வேத வசனம் வெளிப்படும் பொழுது அதை அவர்களால் ஏற்றுக் கொள்ள முடியும். ஒரு மனிதன் விடுவிக்கப்பட்ட நிலையில் சபைக்குள் வரவேண்டும் என்றால், அது திருச்சபை விசுவாசிகளாகிய நமது கரத்தில் தான் உள்ளது. நாம் அவர்களோடு கரிசனையாக அன்பாக பேசி, அவர்களுக்காக பாரத்தோடு ஜெபித்து, பின்னர் இயேசுவின் அன்பை அவர்களுக்கு எடுத்து கூறி பின்னர் அவர்களை ஆலயத்திற்கு அழைத்து வர வேண்டும். அப்பொழுது தான் கூர்மையான வேத வசனம் அவர்களுடைய பாவத்தையும் சாபத்தையும் அகற்றி அவர்களை விடுவிக்கும். ஒருவேளை நீங்கள் உங்களுடைய சபைக்கு உப்பாக செயல்படாமல் இருப்பதாக உணர்ந்தால் உடனடியாக உங்களை அர்ப்பணித்து, சபையில் இருக்கும் ஊழியத்தோடு இணைந்துகொள்ளுங்கள். சபைக்காக செய்யும் எந்த ஒரு சிறு வேலையும் கூட ஊழியம் தான்.

நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்


             நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவாது. மத்தேயு 5:13

                       உப்பு மனித உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள் மற்றும் மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று பழமொழியாக சொல்வார்கள். சமையல் கலையில் உப்பிடும் அளவு மிகவும் அறிவு சார்ந்த செயலாக கருதப்படுகின்றது. உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து பெறப்படுகிறது. மேலும் நிலக்கரி எடுப்பது போல பூமியில் சுரங்கம் அமைத்து பூமிக்குளிருந்து உப்பை வெட்டியெடுபார்கள். இதை தரை உப்புகள் என்பார்கள். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் உப்பு நீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். இதைக் கிணற்று உப்புகள் என்பர். இஸ்ரயேல் நாட்டில் இருக்கும் உப்புக்கடல் என்று அழைக்கபடும் சவக்கடலில் இருந்து தான் உலகின் முதல் தரமான உப்பு தயாரிக்கப்டுகின்றது. இந்த ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர். இவற்றை ஏரி உப்புகள் என்பர். பூமியெங்கும் இந்த நான்கு முறையில் தான் உப்பை தயாரிகின்றார்கள்.

                   நான்கு முறைகளில் உப்பு நமக்கு கிடைக்க பெற்றாலும், உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து தான் பெறப்படுகிறது. நீரை பிரித்தெடுத்து பாத்தி என்று சொல்லப்படும் இடத்திற்கு கொண்டு வருவார்கள். பின்னர் அதை சூரிய ஒளியில் நன்கு காயவிடுவார்கள். கடல்நீரானது வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாக துவங்கும். அந்த சமயத்திலே கடல் நீரில் காணப்படும் உப்பு ஆவியாகாமல் நீரின் மேலேயே உப்பு படிமங்களாகப் படிந்துவிடும். இதை உப்பளங்கள் என்று அழைப்பார்கள். உலகில் கடல் போன்று பாவமும் அதை செய்பவர்களும் பெருகியிருந்தாலும் நீங்கள்ளும் நானும், “அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்குத் தெரிந்துகொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள் (பேதுரு 2:9). கடலில் இருந்து அந்த பாதிகளுக்கு கொண்டுவரப்பட்ட வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரைப் போன்று இருகின்றீர்கள். வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரோடு ஒருகாலும் பழைய கடல் தண்ணீரை சேர்க்க மாட்டார்கள். ஏனென்றால் அந்த பழைய கடல் நீர், இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரின் உவர்ப்பு தன்மையை குறையபண்ணி அதிலிருக்கும் உப்பை வெளிப்படுத்த விடாமல் மறைத்துவிடும். வேறுபிரிக்கப்பட்ட நாமும் பழைய பாவங்களை செய்து வந்தால் நம்மிடம் இருந்து பரிசுத்தம் வெளிப்படாது. இவ்வாறு வேறுபிரிக்கப்பட்ட தண்ணீர் சூரிய ஒளியில் காயும் பொழுதுதான் உப்பு வெளிப்படுகின்றது. அது போல நம்முள் மறைந்திருக்கும் பரிசுத்தத்தை வெளிப்படுத்த நமக்கு ஒருசில உபத்திரவங்களும், சோதனைகளும் வருகின்றது. அந்த நேரத்தில் பொறுமையோடு கர்த்தரின் கரத்தில் அடங்கியிருக்க வேண்டும். நம்மிலிருந்து பரிசுத்த உப்பு வெளிப்படும் பொழுது அது உலகெங்கும் கொண்டு செல்லப்பட்டு பயன்படுத்தப்படும்.

             ஏற்ற நேரத்தில் இந்த வேறுபிரிக்கப்பட்ட தண்ணீரானது தனது உப்பைக் கொடுக்க வேண்டுமென உப்பளத்தின் எஜமான் ஆவலோடு காத்திருப்பார். பிரித்தெடுக்கப்பட்ட அந்த தண்ணீர், ஏற்ற சமயத்தில் தனக்கான உப்பைக் கொடுக்காத பட்சத்தில், எஜமான் அந்த தண்ணீரை குப்பைக்கு நேராகவும், சாக்கடைக்கு நேராகவும் கொட்டிப் போடுவார். நீங்களும் நானும் தேவனுக்காய் பரிசுத்தமாய் வாழ அழைக்கப்பட்டவர்கள். நம்மிடத்திலிருந்து பரிசுத்தம் வெளிப்படா விட்டால் தேவன் நம்மை குப்பையாகிய அந்திக்கிறிஸ்துவின் ஆட்சிக்கும், சாக்கடையாகிய அக்கினி கடலுக்கும் நேராய் நம்மை கொட்டிப் போடுவார். ஆகவே தான் அருள்நாதர் இயேசு சொல்கின்றார், “ உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? அது நிலத்துக்காகிலும் எருவுக்காகிலும் உதவாது, அதை வெளியே கொட்டிப்போடுவார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன் என்றார்” (லூக்கா 14:34-35).

             உன் மாம்சத்தைப் பாவத்துக்குள்ளாக்க உன் வாய்க்கு இடங்கொடாதே (பிரசங்கி 5:6) என்று வேதத்தில் தெளிவாக சொல்லப்பட்டிருக்க இன்றைக்கு அநேக கிறிஸ்த்தவர்கள் பிறரை பற்றி பேசுவதையே பொழுது போக்காக கொண்டுள்ளனர். “கண்ணானது சரீரத்தின் விளக்காயிருக்கிறது; உன் கண் தெளிவாயிருந்தால், உன் சரீரம் முழுவதும் வெளிச்சமாயிருக்கும்“ (மத்தேயு 6:22) என்று இயேசு கிறிஸ்த்து சொல்லியிருக்க இன்றைக்கு நாம் பரிசுத்த கண்களினால் சினிமாக்களை பார்கின்றோம். பிறரை இச்சையோடு பார்கின்றோம். இவைகளை பாவம் என்று அறிந்திருந்தாலும் அனுதினமும் இவைகளை செய்யும் கிறிஸ்த்தவர்களே, “இப்பொழுது உங்களுக்கு வெட்கமாகத் தோன்றுகிற காரியங்களினாலே அக்காலத்தில் உங்களுக்கு என்ன பலன் கிடைத்தது? அவைகளின் முடிவு மரணமே. இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன் (ரோமர் 6: 21-23) என்ற வேத வசனத்தை நினைவில் கொள்ளுங்கள்.

             நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்; உப்பானது சாரமற்றுப்போனால், எதினால் சாரமாக்கப்படும்? என்று இயேசு எவ்வளவு வேதனையுடன் சொல்லியிருப்பார் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள் கிறிஸ்த்துவுக்கு பிரியமானவர்களே. நீங்கள் உங்களுடைய பரிசுத்தத்தை இழந்தால் வெளியே கொட்டப்படுவதற்கும், மனுஷரால் மிதிக்கப்படுவதற்குமே ஒழிய வேறொன்றுக்கும் உதவ மாட்டீர்கள் என்று இயேசு தெள்ளத்தெளிவாக கூறியுள்ளார். பாவம் செய்தால் இயேசு மன்னிப்பார் என்று சொல்லி தொடர்ந்து பாவம் செய்யாதிருங்கள். உங்களை இயேசு பூமிக்கே பயன்படக்கூடிய உப்பாக பரிசுத்தத்தின் பிள்ளையாக அழைத்திருக்கின்றார். பாவங்களை விடுத்து பரிசுத்தம்மாக வாழ்ந்து பூமிக்கு உப்பாக இருக்க உங்களை ஒப்புகொடுப்பீர்களா?

நீங்கள் உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள்


             உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால், அதற்கு எதினாலே சாரமுண்டாக்குவீர்கள்? உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருங்கள், ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாயும் இருங்கள் என்றார். மாற்கு 9:50.

                       உலகின் உயிரோட்டம் உப்பில் உள்ளதை நாம் அனைவரும் அறிவோம். மனிதனின் உயிரோட்டமும் உப்பில் தான் உள்ளது. மனித உடலில் காணப்படும் செல்களிலும் உப்பு காணப்படுகின்றது. ஆகவே தான் வியர்வையானது உப்புத் தன்மை உடையதாக உள்ளது. ஒவ்வொரு மனித உடலிலும் சராசரியாக 250 கிராம் உப்பு இருகின்றது. நீங்கள் உங்களுக்குள்ளே உப்புடையவர்களாயிருக்க அதாவது பரிசுத்தமாயிருக்க வேண்டும் என்று இயேசு விரும்புகின்றார். மனித உடலின் செல்களில் உப்புத் தன்மை குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து பல நோய்கள் ஏற்ப்படும். அதே போல உங்களுடைய உள்ளான மனிதனில் பரிசுத்தம் இல்லையென்றால், பிசாசை எதிர்க்கும் சக்தி உங்களில் குறைவுபட்டு பல்வேறு நெருக்கங்களும் பாடுகளும் உங்கள் வாழ்வில் ஏற்ப்படும். நீங்கள் ஒரு வேளை பலவேறு போராட்டத்தின் மத்தியில் இதை வாசித்துக் கொண்டிருக்கலாம். நீங்கள் ஒரு நிரந்தர விடுதலையைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், முதலில் உங்களுடைய உள்ளான மனிதனைப் பரிசுத்தப்படுத்துங்கள்.

                       உப்பு பலவிதமான அளவுகளில் நமக்கு கிடைக்கும். கல் உப்பு பெரிதாக இருக்கும், தூள் உப்பு பொடியாக இருக்கும். எந்த அளவு உப்பாக இருந்தாலும், அதை திரவ உணவு பொருட்களில் சேர்க்கும் பொழுது அது உணவு பொருளோடு முற்றிலுமாக கரைந்து விடுகின்றது. மேலும் அந்த உணவுப் பொருளை மேன்மைப்படுத்தி சுவையுட்டுகின்றது. சமையல் அறையில் மிக முக்கியமான இடத்தில் இருப்பது உப்பு ஆகும். அதோடு அல்லாமல் சாப்பிடும் இடத்திற்கும் உப்பு வந்துவிடும். இந்த உப்பை மூன்று சதவீதம் தான் எந்த உணவிலும் சேர்ப்பார்கள். இந்த சிறிய அளவு உப்பு, முழு உணவிற்க்குமே தேவையான சுவையை கொடுக்கின்றது. அதே போல நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக, பரிசுத்தமானவர்களாக இருந்தால், சுவையற்று காணப்படும் உங்கள் வாழ்வு முழுமையான சுவையுள்ளதாக மாறும். பெரும்பாலும் நாம் பெரிய பாவங்கள் செய்வதில்லை. அதே நேரத்தில் சிறிய பாவங்களை செய்வதற்கு தயங்குவதில்லை. நீங்கள் கொஞ்சத்தில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டுமென இயேசு விரும்புகின்றார் (மத்தேயு 25:23). ஏனென்றால் அவர்கள் தான் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசிக்க முடியும் அதாவது பரலோக ராஜயத்திற்குள் நுழைய முடியும் என்று தெளிவாக கூறியுள்ளார். மேலும் நாம் பரிசுத்தமாக வாழ்ந்தால் தான் பிறரை பரிசுத்தராம் இயேசுவிடம் வழிநடத்த முடியும்.

                       யோசுவா 7-ம் அதிகாரதில் இச்சையின் நிமித்தம் கொல்லப்பட்ட ஆகான் என்ற மனிதனை குறித்து பார்க்கமுடியும். ஆகான் சொல்கிறான், “நான் இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தருக்கு விரோதமாகப் பாவஞ்செய்தேன். கொள்ளையிலே நேர்த்தியான ஒரு பாபிலோனிய சால்வையையும், இருநூறு வெள்ளிச்சேக்கலையும், ஐம்பது சேக்கல் நிறையான ஒரு பொன்பாளத்தையும் நான் கண்டு, அவைகளை இச்சித்து எடுத்துக்கொண்டேன்; இதோ, அவைகள் என் கூடாரத்தின் மத்தியில் பூமிக்குள் புதைத்திருக்கிறது, வெள்ளி அதின் அடியிலிருக்கிறது என்றான் (யோசுவா 7:20-21). இச்சித்து பாவம் செய்தது அல்லாமல் அதை பூமிக்கடியில் மறைத்து வைக்கிறான். இன்றைக்கு நாமும் பாவம் செய்துவிட்டு ஒருவரும் அதை அறியாதபடி மறைத்து வைக்க முயற்சி செய்கின்றோம். இருதயத்தின் அழத்தையும் அறியும் கர்த்தருக்கு முன்பாக மறைவானது ஒன்றுமில்லையே. “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்” (நீதிமொழிகள் 28:13). ஆகான் தான் செய்த பாவத்தை பூமிக்கடியில் மறைத்ததால் தன் ஜீவனை இழந்து போனான். நீங்கள் ஒருவேளை பாவங்கள் செய்பவர்களாக உணர்த்தப்பட்டால் அதை மறைக்கவும், அதற்காக பரிந்து பேசவும் முற்ப்படாதிருங்கள். மாறாக அதை அறிக்கை செய்து விட்டுவிடுங்கள். அப்பொழுது தேவனிடத்தில் இரக்கம் பெறுவீர்கள். ஆகான் செய்த பாவத்தின் நிமித்தம், “இஸ்ரவேல் புத்திரர் தங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக் கூடாமல், தங்கள் சத்துருக்களுக்கு முதுகைக் காட்டினார்கள் என்றும், நீங்கள் சாபத்தீடானதை உங்கள் நடுவிலிருந்து விலக்காதிருக்குமட்டும், நீங்கள் உங்கள் சத்துருக்களுக்கு முன்பாக நிற்கக்கூடாது. நீங்கள் எழுந்திருந்து உங்களைப் பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் திட்டவட்டமாய் கூறினார். யோசுவா 7: 12-13.). அநேக நேரங்களில் நாம் சத்துருவுக்கு முன்பாக முதுகைக் காட்டி தோல்வியடைவதற்கு காரணம் நமது பரிசுத்தமின்மையே. இஸ்ரயேல் மக்கள் அன்றைக்கு தேவ கட்டளைக்கு கீழ்ப்படிந்து, பாவத்தை விட்டு எழுந்து தங்களை பரிசுத்தம் பண்ணிக்கொண்டார்கள். பின்னர் சத்துருக்களுக்கு முன்பாக போரிட்டு ஜெயம் பெற்றார்கள். தோல்வியால் துவண்டு போயிருக்கும் உங்கள் வாழ்வில் ஜெயம் வேண்டும்மா? முதலாவது உங்கள் பாவங்களை விட்டு எழுந்து உங்களை பரிசுத்தம் பண்ணிக்கொள்ளுங்கள். பின்னர் வெற்றி உங்களை தேடி வரும் என்று கர்த்தர் சொல்கின்றார்.

                       ஒருநாள் பரிசேயர் இயேசுவிடம் வந்து, உம்முடைய சீடர்கள் கைகழுவாமல் சாப்பிடுகின்றார்களே என்றார்கள். அதற்கு இயேசு, வாய்க்குள்ளே போகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது; வாயிலிருந்து புறப்படுகிறதே மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார். வாயிலிருந்து புறப்படுகிறவைகள் இருதயத்திலிருந்து புறப்பட்டுவரும்; அவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும். எப்படியெனில், இருதயத்திலிருந்து பொல்லாத சிந்தனைகளும், கொலைபாதகங்களும், விபசாரங்களும், வேசித்தனங்களும், களவுகளும், பொய்ச்சாட்சிகளும், தூஷணங்களும் புறப்பட்டுவரும். இவைகளே மனுஷனைத் தீட்டுப்படுத்தும்; கைகழுவாமல் சாப்பிடுகிறது மனுஷனைத் தீட்டுப்படுத்தாது என்றார் (மத்தேயு 15 : 1-20). வெளியான மனிதனின் சுத்தத்தை விட மிக முக்கியாமனது இருதயத்தில் பரிசுத்தம் என இயேசு தெளிவாக கூறியுள்ளார். ஏனென்றால் இருதயம் தேவனுடைய ஆவியானவர் தங்கும் இடமாக இருகின்றது. “நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?. ஒருவன் தேவனுடைய ஆலயத்தைக்கெடுத்தால், அவனை தேவன் கெடுப்பார்; தேவனுடைய ஆலயம் பரிசுத்தமாயிருக்கிறது; நீங்களே அந்த ஆலயம்” (I கொரி 3:16-17).

                       ஒருவேளை உங்களுடைய் இருதயத்தில் பரிசுத்தம் இல்லாமல் இச்சையின் கண்களோடு வாழ்ந்து வந்தால் நீங்கள் தேவனுடைய ஆலயமாகிய உங்கள் உடலை கெடுகின்றீர்கள். இதை வாசிக்கின்ற பொழுது இயேசு உங்களை உணர்த்தினால் உடனடியாக அப்படிப்பட்ட பாவங்களை விட்டு பரிசுத்தமாக வாழ உங்களை ஒப்புக்கொடுங்கள். வேதம் வசனம் சொல்கின்றது “எந்த ஜனத்திலாயினும் அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” (அப் 10:35). நீங்கள் இயேசுவுக்கு உகந்தவர்களாக வாழ விரும்புகின்றீர்களா? ஒருவேளை நீங்கள் இயேசுவை அறிந்தோ அறியாமலோ பல பாவங்களை செய்திருக்கக் கூடும். இந்த நிமிடம் பரிசுத்த பிள்ளையாக மாறி இயேசுவிடம் ஓடி வருவீர்களா? திருச்சபைக்கும், உலகிற்கும், உங்களுக்குள்ளும் உப்பாக இருந்து பரிசுத்தமாக வாழ உங்களை அர்ப்பணிப்பீர்களா? கீழே உள்ள சிறிய ஜெபத்தை உள்ளத்தின் ஆழத்திலிருந்து செய்து, உங்களுடைய புதிய பரிசுத்த வாழ்வை தொடங்குங்கள்.

ஜெபம்:

                       எங்களை அதிகமாய் நேசித்து வழிநடத்தும் அன்பின் தகப்பனாம் இயேசுவே, உப்பு நல்லதுதான், உப்பு சாரமற்றுப்போனால் எதினால் சாரமாக்கப்படும்? நான் பரிசுத்தத்தோடு வாழ்வதற்காக அல்லவா தெரிந்துகொள்ளப்படேன். அதற்காக தானே சிலுவையில் கடைசி சொட்டு இரத்தத்தையும் சிந்திநீர். நீங்க மெய்யாகவே என்னுடைய பாடுகளை ஏற்றுக்கொண்டு, என்னுடைய துக்கங்களைச் சுமந்தீர். என்னுடைய மீறுதல்களினிமித்தம் நீர் காயப்பட்டு, என்னுடைய அக்கிரமங்களினிமித்தம் நீர் நொறுக்கப்பட்டீர்; எனக்கு சமாதானத்தை உண்டுபண்ணும் ஆக்கினை உம்மேலே வந்ததே. ஆனால் நானோ அழிந்து போகும் உலக சிற்றின்ப பாவங்களை செய்து என்னை அசுத்தப்படுத்திக் கொண்டேனே. இயேசு கிறிஸ்த்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி நம்மை சுத்திகரிக்கும் என்ற வசனத்தின் படியாக என்னுடைய பாவங்களை நீர் நீக்கி என்னை பரிசுத்தப்படுத்தும். இனி சிற்றின்பம் தரும் பாவங்களை நான் செய்யமாட்டேன். தூய்மை இல்லாத உப்பை வெளியே கொட்டிப்போடுவதைப் போல பரிசுத்தம் இல்லாதவர்களை அக்கினி கடலுக்கு நேராய் கொட்டிப் போடுவீரே. என்னிடத்தில் உள்ள அசுத்தமான இச்சையின் பாவங்களை அகற்றி விடும். இனிமேல் ஒருபோதும் அதை நான் செய்ய மாட்டேன். திருச்சபைக்கு உப்பாகவும், உலகிற்கு உப்பாகவும், எனக்குள்ளே உப்பாகவும் இருந்து பரிசுத்தமாய் வாழ என்னை அர்ப்பணிக்கின்றேன். இயேசு கிறிஸ்த்துவின் நாமத்தில் ஜெபிக்கின்றேன் நல்ல பிதாவே. ஆமேன்.